Admin•••1
avatar
எழுத்ததிகாரன்
15/9/2012, 11:34 am
அந்தப்புரத்திற்குள் நுழைந்த முதல் மந்திரி!

அந்தப்புரத்திற்குள் நுழைந்த முதல் மந்திரி! Snknsd22

National School of Drama என்னும் "புதுதில்லி தேசிய நாடகப்பள்ளி " நடத்திய நாடகப் பயிற்சியின் நிறைவு விழாவில் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகத்தின் காட்சிதான் இந்தப் புகைப்படம். சரியாக பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2000-ஆவது ஆண்டில் தஞ்சை தென்னகப் பண்பாட்டு மையத்தில் இதற்கான பயிற்சியும், அரங்கேற்றமும் நடந்தது!

புதுதில்லி தேசிய நாடகப் பள்ளியின் (National School of Drama) அப்போதைய இயக்குனராக இருந்த திரு K.S.ராஜேந்திரன் அவர்கள் தஞ்சையில் தங்கியிருந்து அந்த நாடகப் பயிற்சயை நடத்தினார்கள். புதுதில்லி நாடகப் பள்ளியின் மாணவரான தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அந்த நாடகப் பயிற்சியின் ஆசிரியராக வந்திருந்தார். அந்த மாணவர்தான் விருமாண்டி திரைப்படத்தில் உலக நாயகனுக்கு வில்லனாக அறிமுகமான திரு.சண்முகராஜா அவர்கள்!

இன்னும் பலர் அங்கு பயிற்சியளித்தார்கள். அந்தப் பயிற்சியின்போது நாடக ஒத்திகையை கவனித்துக் கொள்வதும், வசனங்களை எடுத்துக்கொடுப்பதுமான பணிகளை பயிற்சி மாணவர்களில் ஒருவரான ஒரு சிறுவன் கவனித்துக் கொண்டான். அந்தச் சிறுவனின் திறமையை அறிந்த திரு K.S.ராஜேந்திரன் அவர்கள் அந்த சிறுவனையே இயக்குனராக நியமித்து, நாடக ஒத்திகையை கவனிக்கச் சொல்லியிருந்தார்.

அந்த ஒத்திகையின்போது, வசனங்களை சத்தமாக சொல்லிக் கொடுக்கவில்லை என்று பயிற்சியாளர்களில் ஒருவரான "சிபு கொட்டாராம்" என்பவர் அந்தச் சிறுவனை நகைச்சுவைக்காக கேளி செய்துகொண்டே இருப்பார். அவர்தான் அந்த நாடகத்திற்கான அரங்கத்தை வடிவமைப்பு செய்த ஆர்ட் டைரக்டர். மலையாளமும், தமிழும் கலந்து அவர் பேசுவது மிகவும் ரசனையாக இருக்கும்.

பயிற்சிகள் முடிந்து அடுத்த இரண்டு நாட்களில் நாடக அறங்கேற்றம் நிகழ இருக்கிறது. விளம்பர நோட்டீஸ் எல்லாம் தயாரித்து தஞ்சை பகுதி முழுவதும் ஒட்டுகிறார்கள்... ரேடியோ மூலமும் விளம்பரம் செய்யப்படுகிறது... ஆனால் அந்தச் சிறுவன் ஒரு காட்சியில்கூட நடிக்க முடியாது என்பதை நினைத்து மனதிற்குள்ளேயே அழுது புலம்பிக் கொண்டிருந்தான்... ஒரு கட்டத்துக்கு பிறகு அந்தச் சிறுவனால் அதைத் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. எனவே அவனோடு நெருக்கமாக இருந்த திரு சண்முகராஜா அவர்களிடம் சென்று, வேறு யாரையாவது இயக்கத்தைக் கவனிக்கச் சொல்லுங்கள், நான் இந்த நாடகத்தின் நாயகனாக நடிக்கிறேன் என்று தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறான். அதுமட்டுமல்லாமல் கதாநாயகனாக நடிப்பவர் வசனத்தை மறந்துவிடக் கூடியவர் என்றும் ஆனால் அனைவருக்கும் வசனங்களை சொல்லிக் கொடுத்ததால் தனக்கு முழுமையாக பேசி நடிக்க முடியும் என்பதாகவும் விளக்கம் சொல்கிறான்...

ஆனால் சண்முகராஜா அவர்கள் கோபப்படுகிறார்... "என்ன விளையாடுறியா? இங்கே இருக்கும் யாருக்கும் மறக்காமல் வசனம் பேசி நடிக்கத் தெரியாது என்பது உனக்கே தெரியும்... நாடக அரங்கேற்றம் நடக்கும்போதும் நீதான் வசனத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும். உன்னுடைய நம்பிக்கையில்தான் இந்த அரங்கேற்றமே நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் நீ நடிக்கிறேன் என்று சொன்னால் உன்னோடு நடிக்கும் மற்றவர்களுக்கு யார் பின்னணி குரல் கொடுத்து ப்ராம்ப்டிங் செய்வது?" என்று பல விதமாக கோபப்படுகிறார்.

"அது மட்டுமல்லாமல் நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மகமாயி என்னும் கடவுள் பறவையாக மாறி கதாநாயகனுடன் விவாதம் செய்வதாக காட்சி இருக்கிறதே... அந்தக் கடவுளின் பின்னணி குரலும் நீதானே பேச வேண்டும்? நீ கதாநாயகனாக நடித்தால் கடவுள் பேசும் வசனத்தை வேறு யார் பேச முடியும்? எனவே நீ இந்த நாடகத்தில் எந்தக் காட்சியிலும் நடிக்க முடியாது" என்று கண்டிப்பாக மறுத்து விடுகிறார்.

இதைக் கவனித்த ஆர்ட் டைரக்டர் திரு சிபு கொட்டாராம் அவர்கள் அந்தச் சிறுவனை தனியாக அழைத்துச் சென்று பல விஷயங்களை தெளிவுபடுத்தினார்.

அதுவரையில் இந்த நாடகத்தை தடையில்லாமல் ஒரே காட்சியாக அரங்கேற்றம் செய்ய இருக்கிறார்கள் என்பது அந்தச் சிறுவனுக்கும் தெரியாது, அவனோடு பயிற்சி பெற்ற வேறு யாருக்கும் தெரியாது. அதன் பிறகுதான் சிபு கொட்டாராம் அவர்கள் அந்தச் சிறுவனிடம் மேடை அமைப்புகள், காட்சி நடக்கும் விதங்கள், போன்ற அனைத்தையும் தெரிவிக்கிறார்.

அந்த நாடகம் அரங்கேற்றம் செய்யப்படும் விதம் மிகவும் புதுமையான முறையில் இருந்தது. அதாவது மேடையிலேயே முழு நாடகமும் நடக்காமல், அதன் சுற்றுப் பகுதிகளையும் காட்சி நடக்கும் இடங்களாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அரண்மனையில் நடக்கக்கூடிய காட்சிகளில் மட்டும் மேடையில் தோன்றி நடிப்பார்கள். அடுத்தக் காட்சி அருகில் உள்ள வேறொரு இடத்தில் நடக்கும். அதற்கடுத்த காட்சி இன்னொரு இடத்தில் நடக்கும். ஒவ்வொரு காட்சி முடிந்ததும் அந்த இடத்தில் லைட் அணைக்கப்பட்டு, உடனடியாக வேறு இடத்தில் லைட்டிங் செய்யப்படும். அங்கே அடுத்த காட்சி தொடரும். பார்வையாளர்கள் லைட்டிங் செய்யப்படும் பகுதியை நோக்கித் திரும்பி நாடகத்தை பார்க்க வேண்டும். அதாவது ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கு இடைநிறுத்தம் இல்லாமலும், பார்வையாளர்களுக்கு வெறும் மேடையை மட்டுமே காட்டாமலும், ஒவ்வொரு காட்சியின் பின்னணியை தத்ரூபமாக காட்டும் விதத்தில், ஒரு மேடை நாடகத்தைப் பார்க்கிறோம் என்பதை மறந்து ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் விதத்தில் இந்த நாடக அரங்கேற்றம் அமைய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர். அதற்கேற்ப அந்தச் சிறுவன்த்ன் ஒவ்வொரு காட்சிக்கும் நடிகர்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், மேடை நாடக வரலாற்றிலேயே இதுதான் முதல் முயற்சி என்றும் விளக்கினார்கள். மேலும், நடிகர்கள் பேசும் வசனத்தை ஒலிபெருக்கி மூலம் பிரதிபலிக்க சிறப்பு மைக்குகள் வரவழைக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு தெரியாத வகையில் தரையில் புதைத்து வைத்திருப்பதையும் தெரிவித்தார்....

அதன் பிறகுதான் இதை ஒரு சவாலாக ஏற்று நாடகத்தை சிறப்பாக இயக்குவதாக அந்தச் சிறுவன் ஒத்துக்கொள்கிறான். ஆனாலும் உள்ளுக்குள் ஒருவித ஏக்கம் அவனை வதைத்துக் கொண்டே இருந்தது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒரு நாடகத்தை தனி ஒருவனாக இருந்து மக்கள் முன்னிலையில் Live ஆக இயக்கும் அந்தச் சிறுவன் யாருக்கும் தெரியாமல் இருப்பதை அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை. எப்படியாவது மேடையில் தோன்றியே ஆகவேண்டும் என்று தவித்துக் கொண்டிருந்தான்... எனவே அவனது ஏக்கத்தை சரி செய்வதற்காக திரு கே.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் டைட்டில் கார்டு மாதிரி ஒரு நோட்டீஸ் தயாரித்து, அதில் நடிகர்கள் பெயர், கதாப்பாத்திரத்தின் பெயர் மற்றும் இயக்குனர் உதவி இயக்குனர் என்று அந்தச் சிறுவனுடைய பெயர் மூன்று இடங்களில் இடம்பெறுமாறு தயார்செய்து அனைவருக்கும் கொடுத்தார். என்னதான் இருந்தாலும் மக்கள் முன்னிலையில் மேடையில் தோன்றி நடிக்க முடியவில்லையே என்று ஏக்கம் அந்தச் சிறுவனுக்குத் தனியவே இல்லை...

அப்போதுதான் அந்த நாடகத்தில் உள்ள மந்திரி கதாப்பாத்திரம் அவனுக்கு நினைவில் வந்தது. அந்த மந்திரி கதாபாத்திரம் ஒரேயொரு காட்சியில் மட்டுமே வரும். அதுமட்டுமல்லாமல் அந்தக் கதாபாத்திரத்திற்கு வசனமும் உண்டு. எனவே அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நபரை மாற்றிவிட்டு அதில் நான் நடிக்கிறேன் என்று சொல்கிறான். அதன்பிறகு வேறு வழியின்றி சம்மதித்து நடிப்பதன் காரணமாக நாடகத்தில் எந்தத் தடங்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையோடு அந்தச் சிறுவனுக்கு நடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

இயக்குனராகவும், நடிகனாகவும் ஒரே நேரத்தில் வாய்ப்பு கிடைத்ததால் அந்தச் சிறுவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே விளம்பர நோட்டீஸை எடுத்துக்கொண்டு ஊருக்குச் சென்று தனது வீட்டுச் சுவரிலும் ஒட்டி வைத்து உறவினர்களையும் நாடகத்தை பார்க்க வருமாறு அழைத்தான்....

பயிற்சி முடிந்த இறுதி நாளன்று இரவு 10 மணிக்கு நாடகம் அறங்கேற்றம் தொடங்கியது.... தஞ்சை பகுதியில் இருந்து பொது மக்களும், சிறப்பு விருந்தினராக அன்றைய சட்டமன்ற உறுப்பினர் திரு உபயதுல்லா அவர்களும் வந்திருந்தனர். அந்தச் சிறுவன் மந்திரி வேஷத்துடன் கையில் ஒரு ஒயர்லெஸ் மைக்கை வைத்துக்கொண்டு நடிகர்கள் வசனத்தை மறக்கும்போது பிராம்ப்டிங் செய்வதுபோல் அவரவர் குரலில் பேசி எடுத்துக் கொடுப்பதும், அடுத்தக் காட்சிக்கு நடிகர்களை தயாராக நிறுத்தி வைப்பதுமாக பம்பரமாகச் சுழன்று நாடகத்தை Live-ஆக இயக்கிக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவன் நடிக்க வேண்டிய காட்சி வந்தபோதும் எந்தத் தடங்கலும் இல்லாமல் நடித்து முடித்தபோது சண்முகராஜா அவர்கள் முகத்தில் புன்னகை தெரிந்தது... சிபு கொட்டாராம் அவர்களும் அந்தச் சிறுவனைப் பாராட்டினார். அவையெல்லாம் அந்தச் சிறுவனுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது...

அந்த உற்சாகமும், பாராட்டும் தலைக்கனமாக மாறி மீண்டும் மேடையேறும் அளவுக்கு அவனைத் தூண்டியது. எனவே அடுத்ததாக இளவரசியான கதாநாயகியும் அவரது தந்தையான ராஜாவும் சந்திக்கக்கூடிய ஒரு காட்சி இருந்தது. அவர்கள் இருவருமே மறக்காமல் வசனம் பேசக்கூடியவர்கள். அந்தக் காட்சிக்கு ப்ராம்ப்டிங் தேவையில்லை என்பது அந்தச் சிறுவனுக்கு நன்றாகத் தெரியும். எனவே மந்திரி என்பவர் ராஜாவுடன் இருக்கும் கதாப்பாத்திரம்தானே என்ற எண்ணத்தில் யாருக்கும் சொல்லாமல் திடீரென ராஜாவுடன் அந்தச் சிறுவனும் மேடையில் ஏறிவிடுகிறான்... ஆனால் எதிர்பாராத விதமாக அந்தச் சிறுவனை மேடையில் பார்த்ததும் கதாநாயகியாக நடிக்கும் பெண் வசனத்தை மறந்து அவனையே வெறித்துப் பார்க்கிறார். அப்போது அந்தப் பெண்ணிடம், "என்னைக் கவனிக்காமல் வசனத்தை பேசு..." என்று சொல்கிறான், அந்த பெண்ணோ, "டையலாக் மறந்து போச்சு... என்ன பேசணும்னு சொல்லு?" என்று கேட்கிறார்.. அதன் பிறகு மேடையிலேயே அவர் பேச வேண்டிய வசனத்தை எடுத்துக்கொடுத்து ஒரு வழியாக அந்தக் காட்சியும் சிறப்பாகவே முடிந்தது!

ஆனால் சண்முகராஜா அவர்கள் அதைப்பார்த்து கோபம் கொண்டு "இறங்கி வா... உன்னை உரித்து விடுகிறேன்" என்பதுபோல சைகை காட்டி அந்தச் சிறுவனை மிரட்டுகிறார். காட்சி முடிந்ததும் அந்தச் சிறுவனை அடிக்கத் துரத்துகிறார். ஆனால் அந்தச் சிறுவன் தலைதெறிக்க ஓடிவிடுகிறான். நாடகம் முடியும் வரையில் அவனைத துரத்திக்கொண்டே இருந்தார். ஆனால் அவன் சிக்கவே இல்லை.

ஏன் சண்முகராஜா கோபப்பட்டார் என்பது பிறகுதான் அந்தச் சிறுவனுக்குப் புரிந்தது. அதாவது அந்தச் சிறுவன் இரண்டாவது முறையாக மேடையேறிய காட்சி இளவரசியின் அந்தப்புரத்தில் நடக்கும் நிகழ்வு. இளவரசியின் அந்தப்புரத்திற்குள் ராஜா, ராணி, தோழிகளைத் தவிர வேறு யாரும் செல்லக்கூடாது அல்லவா? ஆனால் அந்தச் சிறுவனுக்கு இந்த விவரங்கள் எதுவும் தெரியாது. மந்திரி என்றால் ராஜாவுடன் இருக்கும் கதாப்பாத்திரம்தானே  என்ற எண்ணத்திலும், இன்னொரு முறை மேடையேறினால் என்ன என்ற ஆர்வத்திலும் விவரம் தெரியாமல் அந்தப்புரத்திற்குள் நுழைந்து விட்டான். நல்லவேளை யாரும் அவனை பாதாளச் சிறையில் அடைத்து பட்டினி போடவில்லை...

அதன்பிறகு அடுத்தடுத்த காட்சிகள் முடிந்து நாடகத்தின் உச்சக்கட்டமான க்ளைமாக்ஸ் காட்சி வந்தது. அந்தக் காட்சியின் ஒட்டுமொத்த சிறப்பும் அந்த சிறுவனின் கையில்தான் இருந்தது! ஏனென்றால் கடவுளுக்கும் பிண்ணனி குரல் கொடுக்க வேண்டும். கதாநாயகனுக்கும் ப்ராம்ப்டிங் செய்ய வேண்டும் என்ற முக்கிய பொறுப்புகள் அந்தச் சிறுவனுக்கு இருந்தது....

அதாவது, அந்தக் கதையின் நாயகனின் அம்மா கடவுள் சக்தி நிறைந்தவர். நாயகன் ஒரு மருத்துவன். கடவுள் பெரிதா? மருத்துவம் பெரிதா? என்ற மகனுக்கும், தாய்க்குமான ஒரு போராட்டம்தான் அந்தக் கதை!

கிளைமேக்ஸ் காட்சியில் அவனது அம்மா இறந்துவிட, அம்மாவுக்குப் பதிலாக கடவுளே நேரில் தோன்றுவதாக காட்சி... கடவுளாக ஒரு பெரிய ராட்சத பறவையை வடிவமைத்திருந்தனர். அந்தப் பறவைக்கான பின்னணி குரல் அந்தச் சிறுவன்தான் பேச வேண்டும். கடவுள் என்றால் அந்தக் குரலில் ஒரு கம்பீரம் இருக்க வேண்டும். அதிலும் மகனுக்கும் "அம்மா" வுக்குமான ஒரு யுத்தம். எனவே அந்த "அம்மா" வின் குரல் எப்படி இருக்க வேண்டும் என்பதை அந்த இடத்தில் அந்த சிறுவனே தீர்மானித்துப் பேசினான் என்பது குறிப்பிடத்தக்கது.

காட்சி தொடங்க (அம்மா)கடவுளுக்கும், மகனுக்குமான யுத்தம் ஆரம்பமானது... அந்தச் சிறுவன் தனது குரலில் பேசுறான்... அந்தக் குரல் ஒலிக்கத் தொடங்கியதும் அரங்கமே அமைதியாகிறது! ஸ்பீக்கர் எல்லாம் அதிர்கிறது! ஒலி அமைப்பாளர் ஒலியில் அளவினைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறார்! ஆனால், ஒலியின் அளவை குறைக்க வேண்டாம் என்று சைகை காட்டிக்கொண்டே பேசுகிறான்... அழுத்தம் திருத்தமான உச்சரிப்புடன் அந்தக் குரல் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது... சண்முகராஜா அவர்கள் அந்தச் சிறுவனை நெருங்கி வருகிறார்... பார்வையாளர்கள் ஆரவாரமாக கை தட்டுகிறார்கள்... கோபத்தோடு வந்த சண்முகராஜாவின் முகத்தில் மீண்டும் புன்னகை தெரிகிறது... நாடக ஒத்திகையின்போது சத்தமாக பேசவில்லை என்று கேளி செய்த "சிபு கொட்டாராம்" அவர்கள் பிரமித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்... K.S.ராஜேந்திரன் அவர்கள் முகத்திலும் அதே மகிழ்ச்சி... அந்தச் சிறுவன் இதையெல்லாம் கவனித்துக்கொண்டே, தனது பிண்ணனி குரலால் அந்த காட்சியை நிறைவு செய்கிறான்... நாடகம் நிறைவடைகிறது...

உடனே சண்முகராஜா அவர்கள் அந்தச் சிறுவனைக் கட்டிப்பிடித்து தூக்கி சுற்றுகிறார்... காட்சி பிரமாதமாக இருந்தது என்றும், உன் குரல் அபாரமாக இருந்தது என்றும் பாராட்டுகிறார்.
பார்வையாளர்கள் அனைவரும் அந்த பின்னணி குரலைப் பற்றி பிரமிப்பாக பேசுகின்றனர். சண்முகராஜா அவர்கள் "இவன்தான் அந்தப் பறவைக்கு பிண்ணனி குரலை பேசியவன்" என்று அறிமுகம் செய்கிறார்.... பார்வையாளர்கள் கை கொடுத்து வாழ்த்து தெரிவிக்கின்றனர்... மேடையில் தோன்றி நடித்தால்தான் நாம் அனைவருக்கும் தெரிவோம் என்ற அந்தச் சிறுவனின் எண்ணம் அப்போதே காணாமல் போனது... பாராட்டையும், புகழையும் இளம் வயதிலேயே நேரில் சந்தித்து மகிழ்கிறான் அந்தச் சிறுவன்!

அந்தப்புரத்திற்குள் நுழைந்த முதல் மந்திரி! Snknsd20

இந்தப் புகைப்படத்தில் ராஜாவுக்கு அருகில் ஒரு மந்திரி நின்றுகொண்டிருக்கிறார் அல்லவா? அதுவும் இளவரசியின் அந்தப்புரத்திற்குள் நுழைந்த முதல் மந்திரி! இந்த மந்திரியை உங்களால் அடையாளம் காண முடிந்தால், இதுதான் அந்த சிறுவன்! ஒருவேளை உங்களால் அடையாளம் காண முடியவில்லை என்றால்?...

அந்தச் சிறுவனின் அடுத்த பிரவேசத்தை நோக்கி காத்திருங்கள்! அதுவரைக்கும் இந்த இணைப்பில் உள்ள புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருங்கள்...

- எழுத்ததிகாரன்.

Message reputation : 100% (15 votes)
Permit Member•••2
avatar
Kavitha Banu
21/9/2012, 6:20 pm
அந்தப்புரத்திற்குள் நுழைந்த முதல் மந்திரியும், மேடை நாடகத்தில் அறிமுகமா முதல் காட்சிப்படுத்தும் விதமும் சிறப்பான அனுபவமாக இருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துக்கள். அந்தச் சிறுவனின் திறமையை திரையிலும் பார்க்க ஆவலாக இருக்கிறேன் குக்கூ...குக்கூ...

Guest•••3
avatar
Mannavan
3/11/2012, 6:46 pm
அருமை அருமை. அபாரமான சிந்தனை. அற்புதமான படைப்பு. மேடை நாடகத்தில் இரண்டு காட்சிகளை வெவ்வேறு இடங்களில் காட்ட முடியாது. திரைச்சீலைகள் மூலம்தான் காட்ட முடியும். ஆனால் இந்தப் புகைப்படங்கள் இது உண்மை என்பதை உணர்த்துகிறது. அதுசரி நீங்கள் தானே அந்தச் சிறுவன்?

நடத்துனர்•••4
avatar
Sekaran Mathan
10/11/2012, 1:01 am
எழுத்ததிகாரன் wrote:அந்த நாடகம் அரங்கேற்றம் செய்யப்படும் விதம் மிகவும் புதுமையான முறையில் இருந்தது. அதாவது மேடையிலேயே முழு நாடகமும் நடக்காமல், அதன் சுற்றுப் பகுதிகளையும் காட்சி நடக்கும் இடங்களாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அரண்மனையில் நடக்கக்கூடிய காட்சிகளில் மட்டும் மேடையில் தோன்றி நடிப்பார்கள். அடுத்தக் காட்சி அருகில் உள்ள வேறொரு இடத்தில் நடக்கும். அதற்கடுத்த காட்சி இன்னொரு இடத்தில் நடக்கும். ஒவ்வொரு காட்சி முடிந்ததும் அந்த இடத்தில் லைட் அணைக்கப்பட்டு, உடனடியாக வேறு இடத்தில் லைட்டிங் செய்யப்படும். அங்கே அடுத்த காட்சி தொடரும். பார்வையாளர்கள் லைட்டிங் செய்யப்படும் பகுதியை நோக்கித் திரும்பி நாடகத்தை பார்க்க வேண்டும். அதாவது ஒரு காட்சிக்கும் அடுத்த காட்சிக்கு இடைநிறுத்தம் இல்லாமலும், பார்வையாளர்களுக்கு வெறும் மேடையை மட்டுமே காட்டாமலும், ஒவ்வொரு காட்சியின் பின்னணியை தத்ரூபமாக காட்டும் விதத்தில், ஒரு மேடை நாடகத்தைப் பார்க்கிறோம் என்பதை மறந்து ஒரு திரைப்படம் பார்க்கும் அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் விதத்தில் இந்த நாடக அரங்கேற்றம் அமைய வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர். அதற்கேற்ப அந்தச் சிறுவன்த்ன் ஒவ்வொரு காட்சிக்கும் நடிகர்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், மேடை நாடக வரலாற்றிலேயே இதுதான் முதல் முயற்சி என்றும் விளக்கினார்கள். மேலும், நடிகர்கள் பேசும் வசனத்தை ஒலிபெருக்கி மூலம் பிரதிபலிக்க சிறப்பு மைக்குகள் வரவழைக்கப்பட்டு, பார்வையாளர்களுக்கு தெரியாத வகையில் தரையில் புதைத்து வைத்திருப்பதையும் தெரிவித்தார்....

மேடை நாடகத்தில் இது ஒரு புதுமையான சிந்தனையாக இருக்கிறது. இதை அப்படியே திரைப்படத்தில் பயன்படுத்தி ஒரே காட்சியில் படமாக்கினால் உலகளவில் பேசப்படலாம் என்பது எனது நம்பிக்கை. எழுத்தில் புதுமை காட்டும் நீங்கள் இதை சினிமாவில் பயன்படுத்தி சாதனை படைக்கலாமே. இந்த அனுபவத்தை எனது முகநூலில் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்த்துக்கள்.

Message reputation : 100% (2 votes)
Member•••5
avatar
Dhanushka
3/8/2022, 9:46 pm
அருமையான அனுபவம். உலகின் முதல் சிங்கிள் ஷாட் தொழில்நுட்பம் இங்கிருந்துதான் தொடங்கியதோ....

•••6
Sponsored content

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

அந்தப்புரத்திற்குள் நுழைந்த முதல் மந்திரி!

From எழுத்ததிகாரன்

Topic ID: 534

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...